:புயலை காரணம் காட்டி, குறைவான விலைக்கு, விவசாயிகளிடம் கரும்பை கொள்முதல் செய்த வியாபாரிகள், கொள்ளை லாபத்திற்கு விற்று பணம் சம்பாதித்தனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை, நடுவீரப்பட்டு, சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், பன்னீர் கரும்பு பயிர் செய்யப்படுகிறது.
இங்கு பயிர் செய்யும் கரும்புகள், பொங்கல் பண்டிகையின் போது அறுவடை செய்யப்பட்டு, சென்னை உட்பட, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும்.மீதமுள்ள கரும்புகளை சில்லரை வியாபாரிகள் வாங்கி, மாவட்டம் முழுவதும், பொங்கல் மற்றும் ஆற்றுத் திருவிழாக்களில் விற்பனை செய்வர். கடந்தாண்டு விளைச்சல் நன்றாக இருந்தபோது, ஒரு கட்டு கரும்பு (20 கரும்புகள்) 300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது; விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்தது.
கரும்பை வாங்கிச் சென்று விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்த வியாபாரிகள், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது கரும்புகளை கொள்முதல் செய்ய, கரும்பு விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்து வைத்திருப்பது வழக்கம்.இந்த ஆண்டும் ஏராளமான கரும்பு விவசாயிகளிடம், வியாபாரிகள் முன்பணம் கொடுத்து வைத்திருந்தனர். பொங்கலுக்கு ஒரு வாரம் முன், கரும்பு அறுவடை துவங்கும்.கடந்த டிசம்பர் 30ம் தேதி வீசிய, "தானே' புயலின் அசுரக் காற்றில், பொங்கல் அறுவடைக்குத் தயாராக இருந்த கரும்புகள் சாய்ந்து, அதிகளவில் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கலக்கமடைந்தனர்.
கரும்புக்கு முன்பணம் கொடுத்து வைத்திருந்த வியாபாரிகள், புயலால் கரும்பு சேதமடைந்ததை காரணம் காட்டி, குறைவான விலைக்கு கரும்பை கொள்முதல் செய்ய முன் வந்தனர்.பல இடங்களில் வியாபாரிகள், 200 ரூபாய்க்கு மேல் ஒரு கட்டு கரும்பை வாங்க மறுத்தனர். கரும்பு விவசாயிகளும் வேறு வழியின்றி கரும்புகளை விற்றால் @பாதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.சத்திரம் பகுதிகளில் ஒரு கட்டு கரும்பு, 150 ரூபாய்க்கு மட்டுமே, வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். சில இடங்களில் மட்டும் நன்கு வளர்ந்துள்ள கரும்புகள், 250 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. புயலால் இந்தாண்டு கரும்பு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இப்படி குறைவான விலைக்கு விவசாயிகளிடம் கரும்பை கொள்முதல் செய்த வியாபாரிகள், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாŒலம் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஒரு கட்டு கரும்பை, 500 முதல், 700 ரூபாய் வரை விற்று, கொள்ளை லாபம் பார்த்தனர்.